அரசின் அடுத்த கட்டம் என்ன?ஜனாதிபதி, பிரதமர் சூசகப் பேச்சு

எவன் கார்ட் விவகாரம் குறித்து பிரதமருடன் கலந்தாலோசித்து அரசாங்கம் எடுக்க இருக்கும் நடவடிக்கை குறித்து ஒரு வார காலத்தில் அமைச்சரவைக்கு அறிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

எவன் கார்ட் சர்ச்சை தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுக் காலை விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இது குறித்து தெரிவித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விசேட அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் உட்பட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்ட போதும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன இதில் பங்கேற்கவில்லை.

திலக் மாரப்பனவின் இராஜினாமா குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு அறிவித்தார். தனக்கு அமைச்சரின் இராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக அவர் இங்கு குறிப்பிட் டுள்ளார். ஆனால் அமைச்சர் மாரப்பன பதவி விலக வேண்டும் என நேற்று நடந்த விசேட அமைச்சரவை கூட்டத்தில் அழுத்தம் வழங்க சில அமைச்சர்கள் ஏற்கெனவே திட்டமிட்டிருந்ததாகவும் அறிய வருகிறது.

கடந்த ஆட்சியில் எவன் கார்ட் நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த நிலையில் எதிர்க் கட்சியினர் இந்த விவகாரத்தில் ஆதரவு வழங்கி வருவது குறித்து ஜனாதிபதி அமைச்சரவைக்கு எடுத்துரைத்துள்ளார். இது அரசாங்க உறுப்பினர்கள் சார்ந்த விவகாரம் என்பதால் இதனை அரசாங்கத்திற்குள்ளேயே தீர்க்க வேண்டும் எனவும் அவர் அமைச்சரவைக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

எவன் கார்ட் விவகாரத்தில் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மீதும் குற்றஞ்சாட்டப்படும் நிலையில், சட்ட மா அதிபரின் நிலைப்பாட்டிற்கமையவே தான் கருத்துக் கூறிவருவதாக அவர் அமைச்சரவையில் குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டுக்களின் படி அன்றி ஆதாரங்களின் அடிப்படையிலேயே சட்டமா அதிபர் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர் தான் எவன் கார்ட் நிறுவனத்தை நியாயப்படுத்த ஒருபோதும் முயலவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் எவன் கார்ட் விசாரணை தொடர்பில் முக்கிய அமைச்சர் ஒருவர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழுத்தம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன சிரேஷ்ட சட்டமா அதிபர் திணைக்கள உயரதிகாரிகள் சிலர் குறித்தும் அமைச்சரவையில் வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுமாறு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாகவும் அறிய வருகிறது.

இதேவேளை எவன் கார்ட் நிறுவனம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது எனவும் அரசாங்கம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, எவன் கார்ட் விவகாரம் குறித்து இதனுடன் தொடர்புள்ள சகல தரப்பினர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரை அழைத்துப் பேசவும் அமைச்சரவையில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

கடந்த வார அமைச்சரவை கூட்டம் எவன் கார்ட் விவகாரத்தினால் சூடு பிடித்ததோடு காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன.

பல தரப்பினரும் எவன் கார்ட் விவகாரம் குறித்து குற்றஞ்சாட்டி வரும் நிலையிலே விசேட அமைச்சரவை கூட்டமொன்றை நடத்தி இதுகுறித்து ஆராய ஜனாதிபதி முடிவு செய்தார்.

© 2014 - 2015 Info Sri Lanka News| - Everywhere for You |Info Sri Lanka News Network | An INSEL Holdings Group Company | Designed and Developed By INSEL
Scroll To Top